×

அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை முத்திரை பதித்துள்ளது: முதல்வர் பெருமிதம்

சென்னை: அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல, வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு.

நம் திராவிட மாடலின் இருகண்களாய் விளங்கும் இத்துறைகளில் நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை, பல கோடி மக்கள் பயனடையச் சிறப்புற நிறைவேற்றி வருகிறோம். இந்த வகையில், நாம் உருவாக்கிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது.

சிறிய நகரங்களிலும் கூட சிக்கலான அரசு மருத்துவமனைகளில் சவாலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர் காக்கும் உயரிய பணியை, அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவக் குழுவினர் செய்து வருவது நாளும் செய்திகளில் இடம்பெறுவது பெருமிதத்தை அளிக்கிறது.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீதும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறமை மற்றும் அக்கறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையை காட்டுகிறது. மக்கள் தொண்டை தொய்வின்றி தொடர்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Tags : Centennial High Specialty Hospital ,Chennai ,Artist Century High Specialty Hospital ,M.D. K. Stalin ,Fr. K. Extla ,Stalin ,
× RELATED எம்பிக்கள் 8 பேர் சஸ்பெண்ட் ஒன்றிய பா.ஜ....