- செஞ்சி ராமச்சந்திரன்
- ஒன்றுபட்ட
- தெற்கு மாவட்டம்
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- ஒருங்கிணைந்த மா
- திமுக
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி என ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட அரசியலில் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். ஆளும்கட்சியான திமுகவில் 1978 முதல் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகாலம் பதவி வகித்தவர். 1965ல் இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்திலேயே அரசியலுக்கு வந்த பழம்பெரும் அரசியல்வாதி. தொடர்ந்து 1977, 1980, 1989ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.
1993ல் திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வைகோ, மதிமுகவை தொடங்கியதில் செஞ்சி ராமச்சந்திரனின் பங்கு அதிகம். தொடர்ந்து, மதிமுக சார்பில் திண்டிவனம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று 1999ல் ஒன்றிய இணை நிதி/ அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் 2004ம் ஆண்டு வந்தவாசி தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். தொடர்ந்து வைகோவுடன் ஏற்பட்ட பிரச்னையில் மதிமுகவை விட்டுவெளியேறி, 2006ல் தாய்கட்சியான திமுகவில் இணைந்து அரசியல் பணியை தொடர்ந்தார்.
பின்னர் 2014ம் ஆண்டு அதிமுகவில் ஜெயலலிதாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்து தற்போது வரை அதிமுகவில் பயணித்து கொண்டிருக்கிறார். சுமார் 12 ஆண்டுகாலமாக அங்கு பயணித்து கொண்டிருக்கும் செஞ்சி ராமச்சந்திரனுக்கு அதிமுகவில் தேர்தலில் போட்டியிட மட்டுமின்றி கட்சியிலும் உரிய முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதுவும் ஜெயலலிதா மறைவுக்குபின்னர் ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘வட மாவட்டமான தென்னாற்காடு மாவட்டத்தில் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர், ஜெயலலிதா போன்றோர்களே அவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். ஆனால், தற்போது அதிமுகவை நம்பி வந்த அவருக்கு உரியமதிப்பளிக்கவில்லை.
காரணம் இக்கட்சியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம் உள்குத்தினால் செஞ்சியாரை தலைதூக்கவிடாமலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காமலும் பார்த்துகொண்டு வருகிறார்.
எப்போதும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அரசியல் தலைவர்கள் போட்டியாளர்கள் யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் முழுகவனமாக வேலை செய்கின்றனர்.
அப்படித்தான் அதிமுகவை நம்பிவந்த செஞ்சி ராமச்சந்திரனை தலைதூக்கவிடாமல் செய்துவிட்டார்கள். ஜெயலலிதா இருந்தால் நிச்சயம் இவருக்கு தேர்தலில் போட்டியிடவும், கட்சி தலைமையில் உரிய அங்கீகாரமும் வழங்கப்பட்டிருக்கும். ஆனால், இங்குள்ள முன்னாள் அமைச்சரின் உள்குத்தால் பழம்பெரும் அரசியல்வாதியான செஞ்சி ராமச்சந்திரனை தலைதூக்கவிடாமல் ஓரங்கட்டி வைத்திருக்கிறார்கள்.
கடந்த 2023ல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக கூட்டத்திலும் கூட்டத்தோடு கூட்டமாக இவரை உட்காரவைத்தது சமூகவலைதளங்களில் பேசும்பொருளானது. ஆனால் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கண்டுகொள்ளவில்லை. தற்போது அவர் அமைக்கும் எந்த குழுவிலும் மூத்த அரசியல்வாதியான செஞ்சியாருக்கு இடம்கிடையாது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தான் சார்ந்த சமுதாய தலைவர்களை கட்சியில் தலைதூக்கவிடாமல் பார்ப்பதில் கில்லாடியாக இருந்துவருகிறார்.
கரண்ட்டில் உள்ள கே.பி முனுசாமியையும் ஓரங்கட்டியவர், அரசியலில் மூத்த தலைவரான செஞ்சியாரையும் ஓரங்கட்டி வைக்கும் வேலையை சிறப்பாக செய்துவருகிறார். வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் செஞ்சியாருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கோருகின்றனர்.
திமுகவில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திற்கே செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், அதிலிருந்து வெளியே செல்வதற்கு முன் சற்று யோசித்திருந்தால் அவருக்கு இன்று திமுகவில் மிகப்பெரிய பதவிகள், உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கும். ஆனால் அதிமுக எனும் மண் குதிரையை நம்பி சென்ற அவருக்கு இந்த நிலைமை. அரசியலில் பழம் தின்னு கொட்ட போட்டவவரை கடைசி காலத்தில்கூட அக்கட்சி கைவிட்டிருப்பது தேர்தலில் பிரதிபலிக்கும்’ என்றனர்.
