மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக பவுன்ராஜ் இருந்து வருகிறார். இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தீவிர ஆதரவாளர். மயிலாடுதுறை தொகுதியில் பவுன்ராஜ்க்கு தான் ‘சீட்’ என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் உறுதியாக அவரிடம் அடிக்கடி கூறி வந்ததாக தெரிகிறது. இதை நம்பி இருந்த மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், அதிமுகவில் தன்னை எதிர்த்து யாரும் கட்சியின் தலைமையிடம் ‘சீட்’ கேட்க மாட்டார்கள் என நினைத்து இருந்தார்.
ஆனால், மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவை சேர்ந்த மேலும் பலர், தங்களுக்கும் சீட் வேண்டும் என தலைமையிடத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கடும் அப்செட்டில் உள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை அதிமுகவினர் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் இருந்தே மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக உள்ள பவுன்ராஜூக்கு சீட் என அவருடைய ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
மயிலாடுதுறை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் அதிமுக நிர்வாகி அன்புரசன் ஆகியோர் மேலிடத்தில் தங்களுக்கு வேண்டிய நபர்கள் மூலம் காய்நகர்த்தி மயிலாடுதுறையில் போட்டியிட தங்களுக்கு சீட் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்களாம். இதனால் இவர்களில் யாருக்கு சீட் கொடுப்பது என தெரியாமல் தலைமையும் குழப்பத்தில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அன்புமணி (பாமக) தரப்பினர் மயிலாடுதுறை தொகுதியை குறி வைத்துள்ளார்கள். எங்களுக்கும் மயிலாடுதுறை தொகுதி வேண்டும் என அவர்கள் கேட்டுள்ளனர். ஒரு தரப்பினருக்கு சீட் கொடுத்தால், மற்றொரு தரப்பினர் கோபித்து கொள்வார்கள். இதனை எப்படி சரி கட்டுவது என தெரியாமல் அதிமுக தலைமை யோசித்து வருகிறது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் அன்புமணி(பாமக) ஆகியோரை நேரிடையாக அழைத்து இதுதொடர்பாக பேசி சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்க அதிமுக தலைமையும் முடிவு செய்துள்ளது.
இருந்தாலும் மயிலாடுதுறை தொகுதியை கூட்டணிக்கு கொடுக்க கூடாது என்பதில் அதிமுக ரொம்பவும் தீவிரமாக உள்ளது. இந்த முறை மயிலாடுதுறையை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் அன்புமணி (பாமக) தரப்பினரும் வேகத்தில் உள்ளனர். இந்த இடியாப்ப சிக்கலை அதிமுக எப்படி தீர்த்து வைக்க போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது’’என்றனர்.
