×

மரக்காணம் அருகே நள்ளிரவு பரபரப்பு பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மரக்காணம், பிப். 4: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(43). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா, இவரது மகள் மற்றும் மருமகனுடன் கூனிமேடு மீனவர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல உமா மற்றும் இவரது மகள், மருமகன் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் பைக்கில் உமாவின் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு தட்டும் சத்தம்கேட்டு உமா எழுந்து சென்று, கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஜன்னலை பூட்டியுள்ளார்.

இதை பார்த்த மர்ம நபர்கள் அவர்கள் வந்த பைக்கில் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை எடுத்து உமா வீட்டின் மீது விசியுள்ளனர். அது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் மீது பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பைக் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமானது. இதையடுத்து மர்ம நபர்கள் அவர்கள் வந்த பைக்கில் அங்கிருந்து தப்பி சென்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து உமா மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் யார், எதற்காக பெட்ரோல் குண்டை வீசினார்கள், முன்விரோதம் காரணமாக வீசினார்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Marakkanam ,Sudhakar ,Koonimedu Fisherman's Village ,Villupuram district ,Uma ,Koonimedu Fisherman's Village… ,
× RELATED தொழிலாளியை தாக்கிய முன்னாள் குற்றவாளி கைது