திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஒரு உறவினருக்கும் படுகாயம் ஏற்பட்டது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக்கிற்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த ஜுமைலா அதை தடுக்க முயன்றார்.
அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
