சென்னை: தமிழக அரசியலில் ஊழல் சக்தி அதிமுக சிதறி ஓட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு தொடக்கவிழா நேற்று பனையூரிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது நடிகரும், தவெக தலைவருமான விஜய் பேசியதாவது: கடந்த 1977ம் ஆண்டு ஜூன் மாதம் எம்.ஜி.ஆர் வானொலியில் ஒரு பேட்டியில் பேசும்போது, ‘அண்ணா இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணியெண்ணி மக்கள் கண்ணீர் வடித்தனர்’ என்று சொன்னார்.
அன்று அந்த மக்களின் கண்ணீரை துடைக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம்தான் அதிமுக. அதேபோன்று, கடந்த 2021க்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையை பற்றி சிந்தித்து பார்த்த தமிழக மக்கள், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டதே என்று தமிழக மக்கள் கண்ணீர் வடித்தார்கள். இன்று இந்த கண்ணீரை துடைப்பதற்கு ஆரம்பித்த இயக்கம்தான் தவெக.
கடந்த 1977ல் கையாண்ட அதே பழைய, தேய்ந்து போன, துருப்பிடித்த, நைந்து போன ஆயுதங்களையே இப்போதும் கையில் எடுக்கிறார்கள்.
எனவே, அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்: ஜென்டில்மேன், தொழில்நுட்பம் வளர்ந்து இன்று எங்கேயோ சென்றுவிட்டது. தயவுசெய்து உங்கள் உத்திகளையாவது கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள் பாஸ். அவர்கள் காமராஜரையும் விமர்சனம் செய்தார்கள். நாம் அவர்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டினால், அவர்கள் செய்கின்ற அராஜகங்களை பற்றி பேசினால், அவர்கள் செய்கின்ற ஊழல்களை பற்றி நாம் அம்பலப்படுத்தினால், உடனே 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதே பழைய ‘தகர டப்பாவை’ எடுத்து உருட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.
அதற்காக அவர்கள் செய்கின்ற தவறுகளை நாம் சொல்லாமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக சொல்வோம், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம். நம்மை தவிர அவர்களை எதிர்த்து நின்று கேள்வி கேட்கும் தில் வேறு யாருக்கு இருக்கிறது? மக்களின் உண்மையான பிரதிநிதி தவெகதான். அடுத்து, இந்த மும்முனை போட்டி, நான்கு முனை போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் பேசுகிறார்கள். ஒரு பக்கம் தவெக, இன்னொரு பக்கம் திமுக தலைமையில் சில கூட்டணி கட்சிகள், மற்றொரு பக்கம் பாஜ தலைமையில் ஒரு கூட்டணி.
இப்படி எத்தனை சக்திகள் வந்தாலும், எத்தனை பேர் அணி திரண்டு வந்தாலும், திமுகவை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நமது தவெகவால் மட்டும்தான் அது சாத்தியம். ‘விஜய் வீட்டை விட்டு வெளியே வா’ என்று சிலர் கூவுகிறார்கள். எனக்கு அவை, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஒவ்வொரு விஜய்யையும் அவர்கள் கூப்பிடுவது போல் தோன்றுகிறது. வாக்குப்பதிவு அன்று வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும், ஒவ்வொரு விஜியும் வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வந்து அணிவகுத்து நிற்பார்கள்.
பழைய இன்ஜின், ஓட்டை இன்ஜின் என்று எத்தனை இன்ஜின்கள் வந்தாலும், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ‘டாப் இன்ஜின்’ நமது தவெக மட்டும்தான். நம் மக்கள் இந்த விசிலை ஊதுகின்ற ஊதலில், இந்த தீயசக்திகளும் ஊழல் சக்திகளும் சிதறி ஓட வேண்டும். அன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தவெக ஆளும் கட்சியாக எழும். இவ்வாறு விஜய் பேசினார். நடிகர் விஜய் ஊழல் சக்திகள் என்று அதிமுகவை மீண்டும் வம்புக்கு இழுத்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
