- ஆஸி ஓபன் டென்னிஸ்
- அல்கராஸ்
- ஜோகோவிக்
- மெல்போர்ன்
- கார்லோஸ் அல்கராஸ்
- நோவாக் ஜோகோவிக்
- ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்
- மெல்போர்ன், ஆஸ்திரேலியா...
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் செர்பியாவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (38) – ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் மோதினர்.
முதல் செட்டில் நேர்த்தியாக ஆடிய ஜோகோவிச் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அடுத்த 2 செட்களில் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய அல்காரஸ், 6-2, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அந்த 2 செட்களையும் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 4வது செட்டில் இரு வீரர்களும் சளைக்காமல் போட்டி போட்டு புள்ளிகளை எடுத்தனர். இருப்பினும் கடைசியில் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார்.
அதனால் 3-1 என்ற செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியில் போராடி தோல்வியை தழுவிய ஜோகோவிச், 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக தற்போது கைப்பற்றி உள்ளார்.
தவிர, குறைந்த வயதில் யுஎஸ் ஓபன், ஆஸி ஓபன் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஆகிய 4 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற சாதனையை அல்காரஸ் அரங்கேற்றி உள்ளார். மாறாக, நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை 10 முறை வென்றுள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக ஜோகோவிச் தோல்வியை தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
