தெஹ்ரான்: ஈரானில் மிக பெரிய மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில், அமெரிக்கா தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையே இதை சதி புரட்சி என குறிப்பிட்டுள்ள ஈரான் தலைவர் கமேனி, இதை தாங்கள் முறியடித்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்கர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது பெரிய பிராந்திய போராக மாறும் என்றும் எச்சரித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டின் பொருளாதாரம் மோசமடைந்து, நாணயம் மதிப்பிழந்ததால், கடந்த டிசம்பர் மாத இறுதியில் பணவீக்கம் உச்சம் தொட்டது. இதனால் அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வன்முறையை ஒடுக்க கமேனி அரசு, ராணுவத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஈரான் போராட்டத்தை வைத்து அமெரிக்காவும் மிரட்டல் விடுத்து வருகிறது. அதாவது ஈரானில் அமைதியாக போராடும் மக்கள் மீது கமேனி அரசு வன்முறையை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்கா தலையிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்தார். இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஈரானில் நடந்த நாடு தழுவிய போராட்டங்களை ஒரு சதிப்புரட்சி என்றும் ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். ஈரான் நாட்டின் காவல் துறை, அரசு அலுவலகங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை மையங்களையும், அரசு அதிகாரிகளையும் அழிப்பதே இதன் நோக்கம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “சமீபத்தில் நடந்த போராட்டம் ஒரு சதிப்புரட்சியை போலவே இருந்தது. நிச்சயமாக, அந்த முயற்சியை முறியடித்து விட்டோம். இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ஐஆர்ஜிசி மையங்கள், வங்கிகள் மற்றும் மசூதிகளை குறிவைத்து தாக்கினர். குரான் பிரதிகளை எரித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை ஏற்கவே முடியாது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஈரானின் மீது நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலும் பிராந்திய போராக மாறும் என்று அமெரிக்காவுக்கு கமேனி எச்சரித்தார். இதுகுறித்து அவர் மேலும், “அமெரிக்கர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்: அவர்கள் போரை தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்திய போராக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.
