மும்பை: ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி நேற்று இந்திய பங்குச்சந்தைகள் இயங்கின. பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்புடன் நேற்று காலையில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 82,389 புள்ளிகள் என சற்று ஏற்றத்துடன் துவங்கியது. ஆனால், பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால் பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன.
சென்செக்ஸ் 2,370 புள்ளிகள் வரை சரிந்து 79,899 ஆனது. வர்த்தகம் முடிவில் 1,547 புள்ளிகள் சரிந்து 80,723 புள்ளிகளில் நிலை பெற்றது. சில மருந்து நிறுவன பங்குகள் மட்டும் ஏற்றமடைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 495 புள்ளிகள் சரிந்து 24,825 ஆனது. கடும் சரிவால் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.10 லட்சம் கோடியை இழந்தனர்.
* வங்கி துறை மறு ஆய்வு
வங்கித் துறையை விரிவாக மதிப்பாய்வு செய்து, நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியுடன் அதை இணைக்க உயர்மட்டக் குழுவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டின் வங்கித் துறையின் செயல்பாடுகளை பற்றிப் பேசிய அமைச்சர், நிதி நிலைத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பைப் பாதுகாக்கும். அதே வேளையில், இந்தத் துறையை விரிவாக மதிப்பாய்வு செய்து, இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியுடன் இணைக்க, விக்ஸித் பாரதத்திற்கான வங்கிச் சேவை குறித்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும், என அறிவித்தார்.
* திமுக திட்டம் ‘காப்பி’
தமிழகத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்குப் பாதுகாப்பான, மலிவு விலை தங்கும் வசதியை உறுதி செய்ய, 2023ல் முதல்வர் ஸ்டாலினால் ‘தோழி’ விடுதிகள் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் மூலம் சென்னை, சேலம், திருச்சி, கோவை, விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, தாம்பரம், தஞ்சை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. திமுகவின் திட்டத்தை பார்த்து காப்பி அடித்து, தற்போது ஒன்றிய பட்ஜெட்டில் மாவட்டத்தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
* மூலதன செலவு இலக்கு ரூ.12.2 லட்சம் கோடி
நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2027ம் நிதியாண்டிற்கான மூலதனச் செலவு இலக்கு ரூ.12.2 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.11.2 லட்சம் கோடியை விட அதிகம்.
* தமிழ்நாடு, மே.வங்கம் எதிர்ப்பு: அசாம், புதுவை வரவேற்பு
ஒன்றிய பட்ஜெட்டில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்திற்கு எதுவும் இல்லை என்று அந்த மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, புதுவை முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
* அமெரிக்கா மிரட்டலால் சாபஹார் துறைமுகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை
கடந்த சில ஆண்டுகளாக, ஈரானின் சாபஹார் துறைமுகத்ைத இந்தியா கையாண்டு வந்தது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில், அமெரிக்கா ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது, ஆனால் சாபஹார் துறைமுகத் திட்டத்திற்கான இந்தத் தண்டனை நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவிற்கு ஆறு மாத கால விலக்கு அளித்திருந்தது.
இந்த விலக்கு ஏப்ரல் 26 அன்று முடிவடைகிறது. இந்த நிலையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத கூடுதல் வரியை விதிப்போம் என்று டிரம்ப் மிரட்டினார். இதையடுத்து பட்ஜெட்டில் சாபஹார் துறைமுகத் திட்டத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.
