சென்னை: தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி வரை சர்வதேச காலணி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக தோல் ஏற்றுமதி கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி தொடர்பாக தோல் ஏற்றுமதி கவுன்சில் நிர்வாக இயக்குநர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: 39வது இந்திய சர்வதேச தோல் மற்றும் தோல் பொருட்கள் கண்காட்சி பிப்.1 முதல் பிப்.3ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பான அனைத்து மூலப் பொருட்களும், ரசாயன இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதில் ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளின் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் 43 சதவீதம் அளவிற்கு இந்தியாவில் தோல் பொருட்களை ஏற்றுமதி செய்து பங்களிக்கிறது. தோல் மற்றும் காலணி துறையில் அனைத்து மூலப்பொருட்களையும் உள்ளடக்கிய உற்பத்தி சூழலை மேம்படுத்தவும், தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவும், ஒரு விரிவான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 2029-30க்குள் 50 பில்லியன் டாலார் வரை வருவாய் இலக்கை அடைய முடியும்.
சர்வதேச காலணி நிறுவனங்கள் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் கிரஸ்ட் லெதர் மீதான இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார். தோல் ஏற்றுமதி கவுன்சிலின் தெற்கு பிராந்திய தலைவர் அப்துல் வஹாப், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் பொது மேலாளர் பிரிஜ்லால் மற்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் ஓஎஸ்டி துறை தலைவர் ஹர்ஷ் கென்டில்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
