பல்வேறு சலசலப்பு, சர்ச்சைகளுக்கு மத்தியில் தலைநகரில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் 3 பாடல்: குடியரசு தின பாசறை திரும்புதல் விழாவில் நெகிழ்ச்சி

 

புதுடெல்லி: பல்வேறு சலசலப்பு, சர்ச்சைகளுக்கு மத்தியில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாசறை திரும்புதல் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தேசப்பற்று பாடல்கள் முழங்கின. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்தித் திரைப்படங்களில் தமக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு மத ரீதியான காரணங்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது பெரும் விவாதங்களைக் கிளப்பியது. ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வந்தனர். பின்னர் தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இந்தியாவிற்குத் தான் எப்போதும் கடமைப்பட்டுள்ளதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், குடியரசு தினக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வான பாசறை திரும்புதல் விழா ேநற்று மாலை டெல்லி விஜய் சௌக் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமை தாங்கிய இவ்விழாவில், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவின் சிறப்பம்சமாக இந்திய கடற்படை மற்றும் ராணுவக் குழுவினர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்கர் விருது பெற்ற ‘ஜெய் ஹோ’, ‘பாரத் ஹும்கோ ஜான் சே பியாரா ஹை’ மற்றும் ‘மா துஜே சலாம்’ ஆகிய மூன்று பாடல்களை வாசித்து அதிரச் செய்தனர். மகாபாரதப் போர் வியூகங்களான ‘தேவ வியூகம்’ மற்றும் ‘அர்த்தசந்திர வியூகம்’ போன்ற வடிவங்களில் வீரர்கள் அணிவகுத்ததுடன், பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் தேஜஸ் போர் விமானங்களின் சாகசக் காட்சிகள் மின்னணுத் திரைகளில் ஒளிபரப்பப்பட்டன.

முப்படையினரின் இந்தத் திறமைகளை வெகுவாகப் பாராட்டிய பிரதமர் மோடி, ‘விமானப் படை மற்றும் கடற்படை வீரர்களின் இசை மற்றும் அணிவகுப்பு வடிவங்கள் மிகவும் நேர்த்தியாகவும் மறக்க முடியாத வகையிலும் இருந்தன’ எனத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாக்கப்பட்டு 150ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்வுகளில் அந்தப் பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: