*கேமரா பொருத்தி கண்காணிப்பு
அந்தியூர் :அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியோரம் உள்ள செம்புலிசாம்பாளையத்தில் ஆசிட் வெங்கிடு என்பவரது தோட்டம் உள்ளது. நேற்று இவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகள் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தது. மேலும் 4 சேவல்களும் கடிபட்ட காயங்களுடன் இறந்து கிடந்தன.
இதனை பார்த்த அதன் உரிமையாளர் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அத்தாணி வனவர் பாரதி சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த ஆடு மற்றும் கோழிகளை பார்வையிட்டனர். இதில் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை வைத்து ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்லது புலியாக இருக்கலாம் என வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஆடு கோழிகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு சிறுத்தையா அல்லது புலியா என்பதை கண்டுபிடிக்க 2 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.இது குறித்து அத்தாணி பிரிவு வனவர் பாரதி கூறியதாவது: வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்தின் வழியாக வந்த மர்ம விலங்கு ஆடு,கோழிகளை கடித்து கொன்று விட்டு, வந்த வழியாகவே திரும்பி சென்றுள்ளது.
ஆடுகளின் கழுத்தில் கயிறு கொண்டு கட்டி வைத்து இருந்ததால் மர்ம விலங்கால் அதனை கவ்வி கொண்டு செல்ல முடியவில்லை. திரும்பவும் கொன்ற ஆடுகளை கவ்வி செல்ல மர்ம விலங்கு வரும். அதனை தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிக்கிறோம்.அதில் பதிவாகும் படங்கள் மூலம் ஆடுகளை கடித்து கொன்றது சிறுத்தையா, புலியா என்பது தெரியவரும். அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவ்வாறு கூறினார்.
