*மகசூலை அதிகரிக்கும்
குமாரபாளையம் : மண்ணின் வளத்தை மேம்படுத்தி, பயிர் விளைச்சலை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்கும் அமிர்த கரைசல் தயாரித்து பயன்படுத்த வேளாண்மை கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.குமாரபாளையம் அடுத்துள்ள பாலக்காடு கிராமத்தில், விவசாயிகளுக்கு அமிர்த கரைசல் தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஹரிணி, ஹர்ஷினி, இஷாநந்தினி, ஹரிஷா, கமலிகா, இந்துமதி ஆகியோர் ஊரக வேளாண்மை பயிற்சியில் ஈடுபட்டனர். வேளாண்மை அதிகாரிகள் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அமிர்த கரைசல் தயாரிக்க பயிற்சி அளித்தனர்.
மாட்டுச்சாணம், கோமியம், வெல்லம், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு மண்பானையில் கட்டிகள் இன்றி கலந்து 24 மணிநேரம் நிழலில் வைத்திருந்து, 1 பங்கு கரைசலில் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்கள் மீது தெளிக்கலாலம் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், நுண்ணுயிர்கள் பெருகி ஊட்டச்சத்துக்கள் அதிகரித்து பயிர் செழித்து வளரும். அமிர்த கரைசலால், ரசாயன உரம் குறையும். பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு குறையும். மகசூல் பெருகும் என விவசாயிகளுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் அப்பகுதி விவசாயிகள் மகளிர் என திரளாக கலந்து கொண்டனர்.
