×

கடலூர் மாவட்டத்தில் 6,636 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்

*நலத்திட்ட உதவிகள் வழங்கி நல வாரிய தலைவர் தகவல்

கடலூர் : கடலூர் நகர அரங்கில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தெரிவிக்கையில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய குறைபாடு, ஒப்பந்ததாரர்களிடம் கலந்தாலோசித்து சீர்செய்யப்படும். தூய்மை பணியாளர்கள் ஒருநாள் பணி செய்யவில்லை என்றால் தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும். ஆகையால் நமது பணியென்பது மகத்தானது.

தூய்மை பணியாளர் நல வாரியத்திற்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.45 கோடி வைப்பு நிதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம் மூலம் விபத்து காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழில்நுட்பப் பட்ட மேற்படிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி உதவி, முதியோர் ஒய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் 2025-26ம் நிதியாண்டில் இதுவரை 38 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.6,81,500 மதிப்பீட்டில் மகப்பேறு, கல்வி, ஈமச்சடங்கு உள்ளிட்ட நிதியுதவிகள்
வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் மாநகராட்சியில் 375 தூய்மை பணியாளர்களும், நகராட்சியில் 712 தூய்மைப் பணியாளர்களும், பேரூராட்சியில் 535 தூய்மைப் பணியாளர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13 தூய்மைப் பணியாளர்களும், ஊராட்சிகளில் 5001 தூய்மைப் பணியாளர்களும் என மொத்தம் 6,636 தூய்மைப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கடலூர் மாநகராட்சியில் 358 தூய்மை பணியாளர்களுக்கும், நகராட்சியில் 648 தூய்மைப் பணியாளர்களும், பேரூராட்சியில் 478 தூய்மைப் பணியாளர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 தூய்மைப் பணியாளர்களும், ஊராட்சிகளில் 2,459 தூய்மைப் பணியாளர்களும் என மொத்தம் 3,953 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் 21 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.81,000 மதிப்பீட்டில் கல்வி, மகப்பேறு மற்றும் திருமணம் நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், 150 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான அடையாள அட்டைகளும், 134 நபர்களுக்கு உதவி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது, என்றார்.மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மாவட்ட மேலாளர் தாட்கோ அருள்முருகன், தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் சங்கீதா, சுபாஷினி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Cuddalore district ,Welfare Board ,Cuddalore ,Tamil Nadu Sanitation Workers Welfare Board ,Cuddalore City Hall ,
× RELATED காரைக்குடி அருகே வீட்டில் சமையல்...