திருவாக்கவுண்டனூரில் திறப்பு விழா மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவுகிறது போலீஸ் கமிஷனர் பேச்சு

சேலம், ஜன.30:  சேலம் மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராக்கள் உதவுகிறது என போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறினார். சேலம் மாநகர பகுதியில் போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, பல்வேறு இடங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இந்த வகையில், சூரமங்கலம் பகுதியில் 102 சிசிடிவி கேமராக்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பொருத்தினர். இதனை பயன்பாட்டிற்கு திறக்கும் விழா, திருவாக்கவுண்டனூரில் நேற்று மாலை நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமை வகித்து, புதிதாக பொருத்தப்பட்ட 102 சிசிடிவி கேமராக்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் கமிஷனர் செந்தில்குமார் பேசுகையில், “சேலம் மாநகர பகுதியில் இதுவரை 17 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சூரமங்கலம் பகுதியில் மட்டும் ஏற்கனவே 2,100 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது புதிதாக 102 சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் 40 வழக்குகளில் துப்பு துலங்கியுள்ளது. அதில், 2 கொலை வழக்குகளில் துப்பு துலங்கி, கொலையாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவி செய்துள்ளது. குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் சிசிடிவி கேமராக்கள் காவல்துறைக்கு பெரிதும் உதவியாக உள்ளது. அதனால், மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன், உதவி கமிஷனர்கள் நாகராஜன், பாலசுப்பிரமணியம், பூபதிராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: