சென்னை: பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்க மறுத்த நிலையில், தவெக கூட்டணியில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தவெகவிடம் 10 சீட் கேட்டு பேரம் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் விஜய், கூட்டணியில் பங்கேற்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று அறிவித்தும் இன்னும் ஒரு கட்சி கூட அவரது கூட்டணியில் இடம்பெறவில்லை. இதனால் தமிழக அரசியல் களத்தில் தவெகவுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் தவெக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இழுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில், அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அக்கூட்டத்தில் பங்கேற்காமல் அதிரடி காட்டினார். ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், பூவை ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றபோது, கிருஷ்ணசாமி பங்கேற்காதது விவாதமாகியது.
இதனால் புதிய தமிழகம் கட்சி என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த சூழ்நிலையில், தவெக கூட்டணிக்கு கட்சிகளை இழுக்கும் படலத்தை தொடங்கிய அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது கிருஷ்ணசாமி தனது கட்சிக்கு 10 சீட் ஒதுக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு யாரும் வராத நிலையில், அதை தவெக தரப்பு ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தவெக கூட்டணியில் விரைவில் புதிய தமிழகம் கட்சி இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
