அமெரிக்காவில் பனிப்புயலால் 30 பேர் பலி: மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் மக்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா முழுவதும் வீசி வரும் கடுமையான பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ‘ஃபெர்ன்’ என்ற பெயரிடப்பட்ட கடுமையான பனிப்புயல் சுமார் 1,300 மைல் பரப்பளவிற்கு வீசி வருகிறது. இதனால் வடகிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவும், தெற்கு பகுதிகளில் பனிக்கட்டியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 1994ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான பனிப்புயலாக இந்த பனிப்புயல் கருதப்படுகிறது.

நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 11 அங்குலம் வரையும், பிட்ஸ்பர்க் நகரின் வடக்கு பகுதிகளில் 20 அங்குலம் வரையும் பனி கொட்டித் தீர்த்துள்ளது. இந்த மோசமான வானிலை காரணமாக சாலை விபத்துகள் மற்றும் கடும் குளிரில் சிக்கி இதுவரை 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பனிப்புயலின் தாக்கம் காரணமாக நியூயார்க் நகரில் மட்டும் கடும் குளிருக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். கன்சாஸ் பகுதியில் ஆசிரியை ஒருவர் பனியில் உறைந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் மெயின் மாகாணத்தில் விமானம் ஒன்று புறப்படும் போது விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆர்கன்சாஸ் மற்றும் டெக்சாஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் விபத்துகள் காரணமாக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த புயலால் சுமார் 10 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், 7 லட்சம் பேர் இன்னும் இருளில் தவித்து வருகின்றனர். விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நேற்று மட்டும் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வானிலை ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘2014ம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைவான வெப்பநிலை தற்போது பதிவாகியுள்ளது’ என்று எச்சரித்துள்ளனர்.

Related Stories: