- பாஜக
- முகநூல்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- திருப்பரங்குன்றம்
- மார்த்தாண்டம்
- பாஜக பொருளாதார பிரிவு மாவட்டம்
- துணை ஜனாதிபதி
- சுரேஷ் குமார்
மதுரை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜவுக்கு எதிராக பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த மார்த்தாண்டம் பாஜ பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சுரேஷ்குமார், திருப்பரங்குன்றம் குறித்து பதிவிட்டவரின் முகநூல் பக்கத்தில் இருந்து அவரது 16 வயது மகளின் புகைப்படத்தை திருடி தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி ஆபாசமாக கருத்து பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் குளச்சல் மகளிர் போலீசார், சுரேஷ் குமார் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சுரேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: சமூக வலைதளத்தில் மனுதாரர் மோசமாக பதிவிட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
மனுதாரர் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பதிவிடுவோர்களின் வார்த்தைகள் மோசமானதாகவும், அருவருக்கதக்க வகையில் உள்ளது. சாதாரணமாக யாரும் இதுபோன்ற வார்த்தைகளைப் பேசத் துணிய மாட்டார்கள். சமூக ஊடகங்களின் இந்தத் தீமையைப் பற்றி இந்த நீதிமன்றம் வேதனையுடன் பதிவு செய்கிறது.
இருப்பினும் மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் இனிமேல் எதிர்காலத்தில் சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளைப் பயன்படுத்த மாட்டேன் என்று கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
