- சென்னை
- தமிழ்நாடு தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- மேற்கு வங்கம்
- புதுச்சேரி
- இலட்சத்தீவுகள்
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15,74,351 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் 4ம் தேதி எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின.
இப்பணிகள் டிசம்பர் 4ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், நடைமுறை சிக்கல்களை காரணமாக படிவங்களை சமர்ப்பிக்க 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19ம் தேதி தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இருந்த மொத்தம் 6,41,14,587 வாக்காளர்களில், 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மொத்த வாக்காளர்களில் 15.18 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில், 5,43,76,755 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2.77 கோடி ஆண் வாக்காளர்களும், 2.66 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். நீக்கப்பட்டவர்களில், 26.32 லட்சம் பேர் இறந்த வாக்காளர்கள், 66.44 லட்சம் பேர் முகவரியில் இல்லாதவர்கள், 3.39 லட்சம் பேர் இரட்டை பதிவாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. ஆனால் முகவரி மாற்றம் காரணமாக நீக்கப்பட்டவர்கள், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். கடந்த டிசம்பர் 19ம் தேதி முதல் வாக்களார் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆன்லைன், வாக்குச்சாவடி மையங்கள், பிஎல்ஒக்களிடம் தங்களின் விண்ணப்பங்களை கொடுத்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க 15,74,351 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்க 96 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். அனைத்து விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, பிப்ரவரி 17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
