×

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் ஜன.31ல் முதல்வர் திறந்து வைக்கிறார்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

திருப்புவனம்: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை வரும் 31ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடந்து வரும் திறந்தவெளி அருங்காட்சியக பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியதாவது: தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் மற்றும் நகர வாழ்வியல் சிறப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வியக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தின் மூலம் நமது பண்டைய தமிழகத்தின் நகர நாகரிகத்தை நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.

நான்கரை ஏக்கர் நிலம் ரூ.6 கோடி செலவில் முறைப்படி நில உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்டு, ரூ.22 கோடி மதிப்பீட்டில் இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக திறந்தவெளி அருங்காட்சியகம் தமிழகத்தில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை அகழவாய்வில் கண்டறியப்பட்ட உறைகிணறு, சுடுமண் கட்டுமானங்கள், சுடுமண் குழாய்கள் போன்றவை குழிகளில் உள்ளவாறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 31ம் தேதி நேரில் வந்து அர்ப்பணிக்கிறார்.இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Keezhadi Open Air Museum ,Chief Minister ,Minister ,K.R. Periyakaruppan ,Thiruppuvanam ,Keezhadi ,Sivaganga district ,Cooperatives Minister ,Collector ,Porkodi… ,
× RELATED ஓபிஎஸ் இல்லாமயே எங்க கூட்டணி பலமா தான்...