அவனியாபுரம்: அதிமுக ஒன்றிணைவது ஆண்டவன் கையில் இருக்கிறது, கூட்டணிக்கு யாரும் என்னை அழைக்கவில்லை என ஓபிஎஸ் விரக்தியாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘என்னுடைய ஒற்றை கோரிக்கை வேண்டுகோள் என்பது பிரிந்திருக்கும் அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது தான். வேறு எந்த கோரிக்கையும் கிடையாது’’ என்றார்.
அப்போது செய்தியாளர்கள், ‘‘அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா’’ என்றனர். அதற்கு ஓபிஎஸ், ‘‘அது ஆண்டவன் கையில் தான் உள்ளது. மீண்டும் நான் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்கிறீர்கள். உங்கள் ஆசீர்வாதத்துடன் நடக்கும். கூட்டணி குறித்து டிடிவி.தினகரன் உள்பட யாரும் என்னை அழைத்து பேசவில்லை’’ என்றார். பின்னர் அங்கிருந்து காரில் பெரியகுளம் புறப்பட்டு சென்றார்.
