நாமக்கல்: நாமக்கல்லில் இன்று காலை நடந்த விபத்தில் 2 வாலிபர் உள்பட 3பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து இன்று அதிகாலை சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் நாமக்கல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 6மணியளவில் நாமக்கல் – திருச்சி ரோட்டில் ரயில்வே மேம்பாலத்தில் வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பெங்களூரில் இருந்து திருச்சிக்கு, நாமக்கல் வழியாக சென்ற லாரியும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து, அந்த வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரில் சென்று கொண்டிருந்த மூன்று வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டூவீலரில் வந்த நாமக்கல் ஜெய் நகரை சேர்ந்த கார்த்தி(21), இந்திரா நகரை சேர்ந்த சேனாதிபதி(22) ஆகிய இருவரும் மற்றும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் உசேன்(27) என்பவரும் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரிந்தது. டூவீலரில் வந்த மற்றொரு வாலிபருக்கும் லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து உயிரிழந்த கார்த்தி, சேனாபதி, உசேன் ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயில்ேவ மேம்பாலத்தில் அதிகாலை நேரத்தில் இரண்டு வாகனங்களும் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
