×

ஓடும் காரில் திடீர் தீ 5 பேர் உயிர் தப்பினர்

சேலம்: சேலத்தில் நேற்றிரவு சாலையில் சென்ற கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேலம் அருகே சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் சக்திஅனீஷ்(32). இவர், நேற்று மாலை, தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோரை காரில் அழைத்து கொண்டு, சேலம் 5 ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்கு வந்தார். அங்கு பொருட்களை வாங்கி கொண்டு, வீட்டிற்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். குரங்குசாவடி பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, கார் இன்ஜினில் இருந்து கரும் புகை வெளியே வந்தது. இதை பார்த்த சக்திஅனீஷ், காரை நிறுத்திவிட்டு, மனைவி, தாய், குழந்தை, சகோதரி ஆகியோரை உடனடியாக இறக்கிவிட்டார். பின்னர் அவரும் இறங்கினார்.

அப்போது கார் முழுவதும் மளமளவென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. காரில் இருந்து புகை வந்ததும், காரில் இருந்து உடனே இறங்கியதால் 5 பேர் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கார் இன்ஜினில் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Salem ,Sakthi Aneesh ,Chithanur Bhuvaneswari ,
× RELATED கரூர் கல்யாண வெங்கட்ரமண கோயில்...