வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி

வேதாரண்யம், ஜன. 29: தைப்பூச விழாவையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. திருமண கோலத்தில் சிவன் பார்வதி அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம், மூடியிருந்த கதவை அப்பரும் சம்பந்தரும் பாடி திறந்ததாக கோயிலின் வரலாறு. இந்த கோயிலுக்கு 10,000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் 200 ஏக்கர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளைந்த நெல்லை அறுத்து தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் இதேபோல் நெல் அறுவடை செய்து அதை கோட்டையாக கட்டி விவசாயிகள், வேதாரண்யம் கொண்டு வந்து மேலவீதியில் உள்ள களஞ்சியம் விநாயகர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று கோயிலில் ஒப்படைத்தனர். பின்னர் அங்கு நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெல் கதிர்கள் வழங்கப்பட்டது. பின்னர் நெல் கோட்டையில் கொண்டு வந்த நெல்லை அரிசியாக்கி சுவாமிக்கு இரண்டாம் காலத்தில் நைவேத்தியம் செய்யப்படும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: