கொல்கத்தா: “மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் அவசரமாக செய்யப்படுவது ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென் எச்சரித்துள்ளார். கொல்கத்தாவின் சாந்திநிகேதனில் வசிக்கும் நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென்னுக்கும் எஸ்ஐஆர் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மேற்குவங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்து அமர்தியா சென் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமர்தியா சென் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “போதுமான காலஅவகாசத்துடன், மிக கவனமாக வாக்காளர் பட்டியலை முழுமையாக மறுஆய்வு செய்வது என்பது ஒரு நல்ல ஜனநாயக நடைமுறையாகும்.
ஆனால் சில மாதங்களில் பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் மேற்குவங்கத்தில் அத்தகைய போதுமான காலஅவகாசத்துடன் எஸ்ஐஆர் பணிகள் நடக்கவில்லை. வரவுள்ள பேரவை தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள், அதனை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க போதிய அவகாசம் தரப்படாமல் அவசர, அவசரமாக எஸ்ஐஆர் பணி செய்யப்படுகிறது.
நான் என் சொந்த தொகுதியான சாந்திநிகேதனில் முன்பு வாக்களித்த இடத்திலிருந்தும், என் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள் அதிகாரப்பூர்வ பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள இடத்தில் இப்போது வசித்தாலும், என் பிறந்த தேதியில் இறந்த என் தாயின் வயது வித்தியாசம் குறித்து தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பி, விசாரணைக்கு அழைத்தது. ஆனால் நான் என் நண்பர்கள் உதவியுடன் அந்த பிரச்னையை சரி செய்தேன். அதேபோன்று உதவிகள் கிடைக்காத குடிமக்கள் என்ன செய்ய முடியும்?
அத்துடன் கிராமப்புற இந்தியாவில் பிறந்த பல இந்திய குடிமக்களை போலவே என்னிடமும் பிறப்பு சான்றிதழ் இல்லை. கிராமப்புற இந்தியாவில் பிறந்த பலருக்கும் இதுபோன்ற பல சவால்கள் உள்ளன. அத்துடன் எஸ்ஐஆர் பணியில் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் போதிய காலஅவகாசம் இல்லை. இவ்வாறு அவசர, அவசரமாக செய்யப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கை வாக்காளர்களுக்கு அநீதியானது. இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.
