- -தூண்டுதல்
- கொத்தக்கோட்டை கிராமம்
- வாணியம்பாடி
- சட்டமன்ற உறுப்பினர்
- தேவராஜி
- Draupadi
- மயிலர் திருவிழாக்கள்
- அலங்கயம்
- திருப்பத்தூர் மாவட்டம்…
வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே நடந்த எருதுவிடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதனை எம்எல்ஏ தேவராஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தக்கோட்டை கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் மயிலார் பண்டிகையையொட்டி நேற்று 71ம் ஆண்டு எருதுவிடும் விழா உற்சாகமாக நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் மேனகா ஜெகதீசன், ஒன்றியக்குழு உறுப்பினர் காயத்ரி பிரபாகரன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சத்தியவாணி பழனி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வாணியம்பாடி தாசில்தார் சுதாகர், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் அரசு வகுத்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு விழாவை எவ்வித அசம்பாவிதங்கள் இன்றி நடத்துவோம் என உறுதிமொழி ஏற்றனர்.
இதில் மாவட்ட திமுக செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டது.
விழாவில் திரண்டிருந்த மக்களின் ஆரவாரத்தின் மத்தியில் ஓடுபாதையில் இலக்கை நோக்கி 200க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. குறிப்பிட்ட இலக்கை குறைந்த விநாடிகளில் சென்றடைந்த முதல் 3 காளைகளின் உரிமையாளர்களுக்கு பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
