×

வெளியூர்களில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது

*கிலோ ரூ.20க்கு விற்பனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது. இப்போது தான் வரத்து துவக்கம் என்பதால், 1 கிலோ ரூ.22 வரை விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் கோடை வெயிலின் தாக்கத்தின்போது தர்பூசணி வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.

இதில் இந்த ஆண்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்து, திண்டிவனம் பகுதியில் தர்பூசணி அறுவடை துவங்கியது. இதில், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று முதல், திண்டிவனம் பகுதில் அறுவடை செய்யப்பட்ட தர்பூசணிகள், அதிகளவு வரத்து துவங்கியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு சில கடைகளில் குவிந்துள்ள தர்பூசணிகளை, உள்ளூர் வியாபாரிகளே, நேரில் வந்து விற்பனைக்காக வாங்கிச்செல்கின்றனர்.

மேலும், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை பகுதியிலிருந்தும் தர்பூசணி வரத்து உள்ளது. அடுத்து இன்னும் சில நாட்களில், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் இருந்து வரத்து அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மொத்த விலைக்கு 1 கிலோ தர்பூசணி ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டில் தற்போதுதான் தர்பூசணி வரத்து என்பதால், மார்க்கெட்டில் இப்போது மொத்த விலைக்கு 1 கிலோ ரூ.18 முதல் ரூ.22 வரை என கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வரும் நாட்களில் வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும்போது, அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pollachi market ,Pollachi ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவையில்...