கும்பகோணம், ஜன.24: கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் நாள் கூட்டம் கும்பகோணம் அல் அமீன் கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கும்பகோணம் சப்-கலெக்டர் ஹிருத்யா தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்.அப்போது, மாற்றுத்திறனாளிகள் உயிரிழக்க நேரிடும்போது அரசின் சார்பில் வழங்கப்பட வேண்டிய உடனடி நிதியுதவி, ஓராண்டு கடந்தும் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
அந்த நிதியை உதவிகளை உரிய நேரத்தில் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது உள்ளிட்ட குறைகளை மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர்.இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தட்சிணாமூர்த்தி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை நிலைய அதிகாரி பிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுசீலா, வட்ட வழங்கல் அலுவலர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
