நெல்லிக்குப்பம், ஜன. 24: நெல்லிக்குப்பம் அருகே என்எல்சியில் வேலை வாங்கி தருவதாக எலக்ட்ரானிக் கடை உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த நீதிமன்ற ஓட்டுனர்கள், பணியாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பி.என்.பாளையம் பிடாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சுந்தர் (60). நெல்லிக்குப்பத்தில் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார். கடையில் வேலை செய்யும் சுரேஷ் என்பவர் மூலம் நெல்லிக்குப்பம் மேல்பாதி பகுதியை சேர்ந்த கடலூர் நீதிமன்ற நீதிபதி கார் ஓட்டுநர் அசோகன், நீதிமன்ற ஊழியர் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், நீதிமன்ற ஓட்டுநர் மனோஜ் ஆகியோரை கடை உரிமையாளர் சுந்தரிடம் அறிமுகப்படுத்தினார்.
இவர்கள் சுந்தரின் பட்டதாரி மகளுக்கு என்.எல்.சி.யில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அதன்பேரில் சுந்தரம் மகளுக்கு வேலை கிடைக்கும் என எண்ணி 4 தவணைகளாக ரூ.16 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தருவது குறித்து எவ்வித பரிவர்த்தனைகளும் செய்யப்படாமல் ஏமாற்றி காலம் கடத்தி வந்தனர். இதுகுறித்து கேட்டபோது மீதமுள்ள ரூ.9 லட்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என பொய்வார்த்தைகள் கூறி வந்தனர். இதனால் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு சுந்தர் கேட்டபோது மறுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
