சுரண்டை, ஜன.24: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி தென்காசி கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் உருவான தினமான ஜன.25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 16 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சுரண்டை காமராஜ் கலை கல்லூரியில் ‘‘மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த வித தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம்.’’ என்ற உறுதிமொழியினை தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கமல்கிஷோர் முன்னிலையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். சுமார் 800 மாணவர்கள் மூலம் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
