சேலம், ஜன.24:சேலம் வீராணத்தில் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சேலத்தை அடுத்துள்ள வீராணம் பெருமானூரை சேர்ந்தவர் பெருமாள் மகன் சவுந்தரராஜன் (19). இவர் நேற்று காலை, தனது நண்பரான பூவரசன் என்பவருடன் பைக்கில் மேட்டுப்பட்டி தாதனூருக்கு சென்றார். அங்குள்ள பள்ளி அருகே சென்றபோது, 4 பேர் கும்பல் அவர்களை வழிமறித்தனர். அவர்கள், கத்தி, இரும்பு ராடை கையில் வைத்துக்கொண்டு, சவுந்தரராஜனை மிரட்டி ரூ.1,500 பணம், ஒரு செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுபற்றி வீராணம் போலீசில் சவுந்தரராஜன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இந்த வழிப்பறியில் ஈடுபட்டது, பிரபல ரவுடிகளான மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த செல்லா (எ) செல்வமணி (29), சின்னனூரை சேர்ந்த பிரகாஷ் (38), வீமனூர் காட்டுவளவை சேர்ந்த மாணிக்கம் (32), வலசையூர் பள்ளிப்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்த செல்வம் (54) எனத்தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
