×

வெள்ளிப்பட்டறை தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலம், மார்ச் 10: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிப்பட்டறை தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இங்கு சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி சிவக்குமார் (40), தனது மனைவி வெண்ணிலா (32) மற்றும் 2 மகள்களுடன் மனு அளிக்க வந்தார். நுழைவு வாயில் பகுதியில் தாங்கள் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், ‘நான் மணியனூர் பகுதியில் வெள்ளி வியாபாரி ஒருவரிடம் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தேன். நான் பணியாற்றிய நேரத்தில், குடும்பத்துக்காக, சிறிது சிறிதாக 60 கிலோ வெள்ளியை சேமித்து வைத்திருந்தேன். இதனையறிந்த அவர், ‘வெள்ளியை தன்னிடம் கொடுத்தால் நல்ல விலைக்கு விற்று தருவதாக’ கூறினார். அதனை நம்பி நானும் 60 கிலோ வெள்ளி மற்றும் 2 பவுன் தங்க நகையை அவரிடம் வழங்கினேன். 3 ஆண்டுக்கு மேலாகியும் பணத்தை தரவில்லை. 10 கிலோ வெள்ளியை கொடுத்த நிலையில், மீதியை தர மறுக்கிறார். இதுகுறித்து கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ரூ.1 கோடி மதிப்பிலான எனது வெள்ளியை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத் தர வேண்டும்,’ என்றார்.

Tags : Salem ,Salem District Collector ,Salem District ,Nethimedu ,Salem, Sivakumar ,
× RELATED ரயில்வே சுரங்கப்பாதையை அடைக்க எதிர்ப்பு