* இனிப்பு கொடுத்து ஆப்பு, அதிமுக-அமமுக கூட்டணி குறித்து பகீர்
சேலம்: எடப்பாடிக்கு எதிராக இருந்த டிடிவி தினகரன் திடீரென அதிமுக கூட்டணியில் சேர்ந்தது ஏன்? என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. நீங்கள் தான் முதல்வர் என ஆசைகாட்டி, எடப்பாடியை அரசியலில் இருந்தே ஓரம் கட்ட தீட்டியுள்ள ரகசிய திட்டம் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமமுக என்ற கட்சியை தொடங்கினார்.
அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் பாஜவுடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் இருவரையும் கூட்டணியில் சேர்க்க முடியாது என எடப்பாடி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் கடும் கோபமடைந்த தினகரன், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியதுடன், இருவரும் பாஜ- அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தனர்.
அதேநேரத்தில் இவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்க்க பாஜ கடும் முயற்சிகளை மேற்கொண்டது. `எடப்பாடியுடன் கூட்டணி சேருவதற்கு பதிலாக தூக்கு மாட்டி கூட தொங்கிவிடுவோம்’ எனவும், துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் பழனிசாமிக்கு கொடுக்கலாம் எனவும் டிடிவி.தினகரன் கூறினார். இதற்கு எடப்பாடியோ, டிடிவி தினகரன் ஒரு 420 (மோசடிக்காரர்) என கடுமையாக தாக்கினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் பாஜ-அதிமுக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து எடப்பாடி, டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த இணைப்பில் பெரும் சதி திட்டம் இருப்பதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜ முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: கரூர் கொங்கு கவுண்டர் சமூகத்தை சேர்ந்த அண்ணாமலை, தொடர்ந்து பொய்களை கூறி பாஜ முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து ஓரம் கட்டினார்.
இதனால் அவர்கள் அனைவரும் இவருக்கு எதிராக திரண்டனர். அதேநேரத்தில் அதிமுக மாலுமி இல்லாத கப்பலாக தள்ளாடியது. அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இவரும் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். அக்கட்சியை தனது தலைமைக்கு கீழே கொண்டு வர அண்ணாமலை திட்டம் தீட்டி செயல்பட்டார். மேலும், கொங்கு சமுதாய மக்களின் தலைவராக எடப்பாடி திகழ்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை.
இதனை தெரிந்து கொண்ட எடப்பாடி, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியே வந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். என்றாலும் தேர்தலில் பெரும் வெற்றியை பெறுவோம் என பாஜ மேலிடத்தில் அண்ணாமலை உறுதியாக கூறினார். ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இதனால் டெல்லி தலைமை கடும் அதிர்ச்சியடைந்தது. அதன்பிறகு தான் அண்ணாமலை கூறுவது எல்லாம் பொய் என்பதை மேலிடம் தெரிந்து கொண்டது. இதையடுத்து, எடப்பாடியை அணியில் சேர்த்து எப்படியாவது தமிழ்நாட்டில் கால் ஊன்றிவிட வேண்டும் என்று கருதி, பல்வேறு ஊழல் வழக்குகளை கையில் எடுத்து அவரை மிரட்டினர். ஆனாலும் எந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்க கூடாது, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் கூட்டணி சேருவேன் என்று எடப்பாடி நிபந்தனை விதித்தார்.
அதன்படி அண்ணாமலையின் தலைவர் பதவி பறிக்கப்பட்டவுடன் பாஜவுடன் கூட்டணியில் சேர்ந்தார். இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தினார். இவரது ஆலோனையின்படி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணியில் இருந்து வெளியே வந்தனர். இதனால் கோபமடைந்த டெல்லி, மீண்டும் இருவரையும் உள்ளே கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பை அண்ணாமலையிடம் கொடுத்தது.
பாஜவை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அமைப்போம் என்பதில் உறுதியாக உள்ளனர். அன்புமணியும் ஆட்சியில் பங்கு கிடைக்கும் என உறுதியாக கூறி வருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தனியாகவே நாங்கள் ஆட்சி அமைப்போம் என்கிறார். ஆனால், தேர்தல் முடிவுக்கு பிறகு வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக கொண்டு வந்து விடலாம் என்ற ரகசிய திட்டத்துடன் பாஜ இருக்கிறது. தற்போது எடப்பாடி பழனிசாமியே கூட்டணிக்கு தலைவர் என டெல்லி பாஜவும் கூறுகிறது.
இதனை எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். அதே நேரத்தில் டிடிவி தினகரனும், அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார்கள். இந்த திட்டத்தை தினகரனிடம் அண்ணாமலை கூறியுள்ளார். இதையடுத்ேத டிடிவி தினகரன், பாஜ கூட்டணியில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்திடமும் இந்த திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* அதிமுக மாஜிக்கள், நிர்வாகிகள் டிடிவியுடன் தொடர்பு வைக்கக்கூடாது: எடப்பாடி தடை, ரகசிய டீம் மூலம் கண்காணிப்பு
தே.ஜ. கூட்டணியில் டிடிவி.தினகரன் அமமுக இணைந்ததையடுத்து டிடிவிக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு டிடிவியும் நன்றி கூறினார். தேவைப்படும்போது எடப்பாடியை சந்திப்பேன் என்றும் தெரிவித்தார். ஆனாலும் அதிமுக மற்றும் அமமுகவை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு இந்த கூட்டணியில் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தாமரை இலை தண்ணீர் போல் அவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தலைமையில் இருந்து தென் மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு ஒரு வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
அதாவது, ‘‘தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ள அமமுக நிர்வாகிகளுடன் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது. குறிப்பாக டிடிவி.தினகரனை தொடர்பு கொண்டு முன்னாள் அமைச்சர்கள் பேசக்கூடாது. அதையும் மீறி தொடர்பில் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எடப்பாடி எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
இதை கண்காணிக்க ரகசிய டீம் ஒன்றையும் எடப்பாடி உருவாக்கியுள்ளாராம். இந்த டீம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே, தினகரன் அதிமுகவில் இருந்த போது, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் தினகரனோடு நெருக்கமாக இருந்தார்கள்.
அந்த நெருக்கத்தை பயன்படுத்தி தினகரன் யாரையும், தன் பக்கம் இழுத்து அதிமுகவை கைப்பற்ற திட்டமிடுவார். இதை தடுக்கவே எடப்பாடி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தலைமையே இப்படி உத்தரவிட்டால், சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எப்படி ஒன்று திரண்டு பிரசாரம் செய்வது, வேட்பாளர்களை எப்படி வெற்றி பெற வைப்பது என்று அமமுகவினர் புலம்பி வருகின்றனர்.
