×

7ம் தேதி விருதுநகர் தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு 2026 தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை: வரும் 7ம் தேதி விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு, 2026 தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். வரும் பிப்ரவரி 7ம் தேதி விருதுநகரில் நடக்க உள்ள திமுக இளைஞர் அணியின் தென் மண்டல திமுக நிர்வாகிகள் சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அன்பகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: நம் முதன்மையான இலக்கு, இந்த தெற்கு மண்டலத்தில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை நிர்வாகிகளும் எவரும் விடுபடாமல் இந்த சந்திப்பிற்கு வருகை தர வேண்டும் என்பதாகும். அதற்கென தனியாக வருகைப் பதிவு செய்யப்படும். அடையாள அட்டைகள் இங்கிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி மற்றும் பேரூரிலிருந்தும் இளைஞர் அணியின் புதிய நிர்வாகிகளை இச்சந்திப்பிற்கு அழைத்து வருவதற்கான வசதிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். உங்களுக்கான உதவிகளை அன்பகத்திலிருந்து செய்வார்கள்.

நிர்வாகிகள் சந்திப்பு அன்று விருதுநகருக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உடனடியாக வந்துவிட முடியும். ஆனால், கன்னியாகுமரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வருவதற்கு இரண்டு மூன்று மணி நேரம் ஆகும். எனவே, அனைத்துப் பேருந்துகளும் ஒரே நேரத்தில் திடலுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். உள்ளே வர முடியாத நெருக்கடி உண்டாகும். அதற்கு ஏற்ப நாம் அனைவரும் திட்டமிட்டு அந்தந்த மாவட்டங்களிலிருந்து கிளம்ப வேண்டும். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்க உள்ளார்.

தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும், அரசின் சாதனைகளை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும், வாக்காளர்களுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, தேர்தல் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் உரையாற்ற உள்ளார். வருகைப் பதிவு மிக முக்கியம். எத்தனை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்களோ அத்தனை பேரும் நிச்சயமாக வர வேண்டும். அந்தந்த மாவட்டங்களிலிருந்து புறப்படும் போதே அவர்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைத்து அழைத்து வர வேண்டும்.

தலைவரும் நமக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். எவ்விதமான சிறு தவறும் நடந்துவிடக் கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அங்கு 87,000 நிர்வாகிகள் இருப்பார்கள் எனக் கணக்கிட்டுள்ளோம். எனவே, ஒரு சிறு விமர்சனத்திற்கோ, தவறுக்கோ நாம் இடமளித்துவிடக் கூடாது. 2024 மக்களவை தேர்தல் வெற்றிக்கு, சேலம் மாநாடு எவ்வாறு ஒரு முன்னுரையாக இருந்ததோ, அதேபோல சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு இந்த நிர்வாகிகள் சந்திப்பு ஒரு அடித்தளமாக இருக்கும் என நம்புகிறோம். ஆகவே, இவற்றை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய பணிகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிர்வாகிகள் சந்திப்பை மற்ற இயக்கங்கள் வியந்து பார்க்கும் அளவிற்குச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை சந்திப்பு முடிந்த பிறகு சுமார் ஒரு வாரம் வரை அனைத்து இயக்கங்களும், ஊடகங்களும் அச்சந்திப்பை எவ்வாறு இவ்வளவு சிறப்பாக நடத்தினார்கள், இவ்வளவு இளைஞர்களை எவ்வாறு திரட்டினார்கள், முன்னேற்பாடுகள் எப்படி, இவ்வளவு நேர்த்தியாக இருந்தன என்பதைப் பற்றியே பேசினார்கள். எனவே, இந்த முறை திருவண்ணாமலை சந்திப்பை விடப் மிகப்பெரிய வெற்றியை விருதுநகர் சந்திப்பில் நிகழ்த்திக் காட்ட வேண்டும். நம்முடைய தெற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி. 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டும். ‘வெல்லுவோம் 200, படைப்போம் வரலாறு. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : South Zone Youth Team ,Virudhunagar ,2026 elections ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED என்.டி.ஏ. பேனரில் மாம்பழச் சின்னம் – ராமதாஸ் அதிர்ச்சி