×

அரசியலில் இருந்தே விலகுகிறேன்: அதிமுக மாஜி எம்எல்ஏ கண்ணீர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமசந்திரன். அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த அவர், ஓபிஎஸ் அணிக்கு தாவினார். அங்கும் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். இந்நிலையில் திமுகவில் சேர முடிவு செய்திருப்பதாகவும், வரும் 26ம்தேதி தஞ்சையில் நடக்கும் மகளிரணி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் திமுகவில் இணைவேன் என்று நேற்றுமுன்தினம் ஆர்.டி.ராமசந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி: ஆதரவாளர்களுடன் ஆலோசித்து திமுகவில் இணைவது என்று முடிவெடுத்தேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பும், அதனால் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவும், எனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு மருத்துவர் ஆலோசனையின் காரணமாகவும் இப்போது, பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் தான். ஆனாலும் என் உடல் நிலையை கருத்தில் கொண்டும், குடும்ப சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் மற்றும் குடும்ப நிம்மதிக்காக நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.

நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்க போவதில்லை. ஒட்டுமொத்த குடும்பமும் எனது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஜெயலலிதா படத்தை வீட்டிலிருந்து, அலுவலகத்திலிருந்து அகற்றுவாயா? என்று அவர்கள் கேட்டது என்னை பாதித்தது. இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. காலையில் வீட்டாரிடம்டன் சொல்லிவிட்டு இந்த முடிவை தெளிவாக எடுத்திருக்கிறேன். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும், என்னோடு பயணித்த கட்சி தொண்டர்களும் என்னை மன்னிக்க வேண்டும். என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த தொண்டர்கள் அவரவர் விரும்பும் கட்சியில் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தழுதழுத்த குரலில் கூறினார்.

Tags : AIADMK MLA ,Perambalur ,AIADMK ,Kunnam ,Perambalur district ,R.D. Ramachandran ,OPS ,DMK ,Thanjavur… ,
× RELATED என்.டி.ஏ. பேனரில் மாம்பழச் சின்னம் – ராமதாஸ் அதிர்ச்சி