×

கிடைச்சா கெத்து… கிடைக்காட்டி உள்குத்து… 3 ‘ஆர்’ நிலைமை கவலைக்கிடம்: ஏழு தொகுதியிலும் நடக்குது ஏழரை; சீட்டுக்கு துண்டு போடும் நயினார் வாரிசு

விருதுநகர்: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக, பாஜ, பாமக (அன்புமணி) அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அண்மையில் முடிவு செய்யப்பட்டது. தே.ஜ. கூட்டணியில் பாஜ சார்பில் 60 தொகுதிகளில் போட்டியிட அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். குறிப்பாக, இந்த 60 தொகுதிகளில் பாஜ கேட்கும் இடங்களை எடப்பாடி ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் என 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

இதில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய மூன்று தொகுதிகளை பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் பாஜ மாநில தலைமை நிர்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் பாஜ கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கரு.நாகராஜன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து, அதற்காக சீட் வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாத்தூர் தொகுதியில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் மகனும், பாஜ விளையாட்டுப் பிரிவு இளைஞரணி மாநிலத் தலைவருமான பாலாஜி போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

மேலும் ராஜபாளையம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவும், பாஜ மாநில தலைவருக்கு நெருக்கமானவருமான கோபால்சாமி போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதே நேரம் அருப்புக்கோட்டை தொகுதியில், சமுதாய வாக்குகளை கண் வைத்து, பாஜ சார்பில் போட்டியிட பேராசிரியர் ராம சீனிவாசன் காய் நகர்த்தி வருகிறார். விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜ சார்பில் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்ட மண்ணின் மைந்தரான மாபா பாண்டியராஜன், விருதுநகர் தொகுதியில் தே.ஜ. கூட்டணியில் போட்டியிடுவதற்காக, கடந்த ஓராண்டுக்கும் மேலாக களப்பணி ஆற்றி வந்தார்.

குறிப்பாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கவருடன் வேஷ்டி, சேலை வழங்கினார். இந்த சூழலில் பாஜவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டால், மாபா பாண்டியராஜனின், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் கனவு தகர்ந்து விடும். அதேபோல் சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பிய விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோரது நிலை கேள்விக்குறியாகும்.

அதேபோல் அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் வைகைச்செல்வன் நிலையும் அதோகதிதான். இதனால் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளை அதிமுக, பாஜ பங்கீடு செய்வதில் பெரும் சிக்கல் உள்ளது. அப்படியே இந்த இரண்டு கட்சிகளில் யாருக்கு சீட் ஒதுக்கப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் ஒருவருக்கொருவர் உள்குத்து வேலையில் ஈடுபடுவார்கள் என்பது நிதர்சனம். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தனது ஆஸ்தான சிவகாசி தொகுதியில் இருந்து மாஜி பால்வள மந்திரி, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்த முறை ராஜபாளையமா? அல்லது சிவகாசியா என்ற குழப்பத்தில் உள்ளார். இதுதொடர்பாக நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசி வருகிறாராம். விருதுநகர் மாவட்டத்தில் ஆர்ஆர்ஆர் என அழைக்கப்படும் ராஜேந்திரபாலாஜி – ரவிச்சந்திரன் – ராஜவர்மன் ஆகியோரின் நிலையே இந்த தேர்தலில் நிலையில்லாமல் இருக்கிறதே என அதிமுக தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரம் சீட்டு கிடைப்பதில் முன்னே பின்ேன இருந்தால், விட வேண்டாமென மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் ஒரு லிஸ்ட் போட்டு பாஜ கட்சி நிர்வாகிகள் காத்திருக்கின்றனராம்…!

Tags : Nainar Waris ,Virudhunagar ,2026 assembly elections ,Tamil Nadu ,National Democratic Alliance ,AIADMK ,BJP ,PMK ,Anbumani ,N.J. ,
× RELATED என்.டி.ஏ. பேனரில் மாம்பழச் சின்னம் – ராமதாஸ் அதிர்ச்சி