சென்னை: தமிழக அரசுடன் தொடர் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் தமிழக ஆளுநர் கலந்துகொண்ட விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். மேலும், மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்க ஆளுநருக்கு தகுதியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
துணை வேந்தவர்கள் நியமனம் விவகாரம், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது, மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, மாநில அரசின் சட்டங்களை மீறி செயல்படுவது, ஆதாரங்கள் இல்லாமல் அரசு மீது சர்ச்சை கருத்து கூறுவது என தமிழக அரசுடன் ஆளுநர் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில், சட்டப் பேரவை நிகழ்வுகளின்போதும் ஆளுநர் உரையை படிக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக வெளியேறினார்.
நேற்று முன்தினம் நடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரிலும் அதேபோல தனது உரையை வாசிக்காமல் 3ம் ஆண்டாக வெளியேறினார் ஆளுநர். இதையடுத்து, ஆளுநரின் பெரும்பாலான நிகழ்வுகளை தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர். சென்னைப் பல்கலைக் கழகத்தின் 167வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது.
அதில் ஆளுநர் பங்கேற்று பட்டங்களை வழங்குவார் என்றும், இஸ்ரோவின் அறிவியல் அறிஞர் சிவதாணுப்பிள்ளை விழாப் பேருரையாற்றுவார் என்றும் சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் ஆளுநருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டமன்றத்தின் மாண்பைக் கெடுக்கும் வகையிலும், தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரான செயல்களையே ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும், திறமைகளையும் கொச்சைப்படுத்தி, பொய்களை பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை. எனவே சென்னை பல்கலை கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். இவ்வாறு கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவையும், திறமைகளையும் கொச்சைப்படுத்தி, பொய்களை பரப்பி வரும் ஆளுநருக்கு பட்டம் வழங்கும் தகுதியில்லை.
