×

தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292 கோடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை: தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் ரூ.2292 கோடி செலவில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கடந்த நான்கரை ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, தூத்துக்குடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், செயற்கை நூற்பு இழை நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், அறைகலன் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட உள்ளன.

இவைமட்டுமின்றி, கப்பல் கட்டுமான தொழிற்சாலை, பசுமை சக்தி உற்பத்தி நிறுவனங்கள், விண்வெளி சாதன உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் விதமாக, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் விரிவாக்கம், விமான நிலையம் விரிவாக்கம் மற்றும் மதுரை -தூத்துக்குடி தொழில் வழித்தடங்கள் போன்றவை இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக, இப்பகுதியின் சமச்சீர் வளர்ச்சி மேம்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக தற்போது தாமிரபரணி ஆற்றின் நீர் பயன்படுத்தப்பட்டு வருவதற்கு மாற்றாக, ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை நிறுவி தண்ணீர் வழங்க வகை செய்யும் இத்திட்டம் ரூ.2292.38 கோடி திட்ட மதிப்பீட்டில் 40 சதவீதம் சிப்காட் பங்களிப்புடனும், தனியார் நிறுவன கூட்டமைப்பின் 60 சதவீதம் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, சென்னை தலைமைச்செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இத்திட்டம், தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, சுற்றுப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் தடை இல்லாத நீர் வழங்கும் சேவையை உறுதி செய்திடும்.

இதனால், வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றின் நீர் பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச்செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Mullakkadu village, ,Thoothukudi ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Mullakkadu village, Thoothukudi ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED மந்தைவெளி பேருந்து முனையத்தில்...