- பண்டிகை விருந்து
- சென்னை
- பஹ்ஜா
- மத்திய அமைச்சர்
- பையஸ் கோயல்
- தமிழ் சட்டமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு அளிக்கப்பட்ட விருந்தை பாஜ தவிர மற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் அன்புமணி தரப்பிலான பாமக கூட்டணியை இறுதி செய்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வரவுள்ள நிலையில் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் கூட்டணி கட்சியினரை அறிமுகப்படுத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக பாஜ தமிழக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார்.
தொடர்ந்து, அவர் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக என்.டி.ஏ கூட்டணியில் டிடிவி.தினகரனின் அமமுக கட்சி நேற்று முன்தினம் இணைந்தது. மேலும், ஐஜேகே, தமாகா, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் ஆகியோருடனும் தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேமுதிக இன்னும் யாருடன் கூட்டணி என்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு விருந்து அளித்தார். இதில், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த நிர்வாகிகளான வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விருந்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று முதலில் எடப்பாடி பழனிசாமி விரும்பியுள்ளார். பாஜ தலைவர்களும் அதை விரும்பியுள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் பியூஸ் கோயலை சந்தித்த டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூட கூறாமல் சென்று விட்டார்.
இதனல், அவர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு எதற்காக விருந்துக்கு வரவேண்டும் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். அதேபோல அன்புமணியும் வரவிரும்பவில்லை. இதனால் கூட்டணிக் கட்சியினருக்கான விருந்தை பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்று அதிமுகவினர் முடிவெடுத்தனர். பியூஸ் கோயல் மற்றும் பாஜ தலைவர்களுக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டனர். அவர்களுக்கு காலையில் விருந்தளிக்கப்பட்டது.
* பிரதமர் மோடி கூட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் – எடப்பாடி
விருந்துக்கு பின் பின்னர் நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: பாஜ தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அவருடன் பாஜ மூத்த நிர்வாகிகள் எனது இல்லத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விருந்தில் பங்கேற்று சிறப்பித்தமைக்கு நன்றி. பிரதமர் நாளை (இன்று) கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். நாளை (இன்று) நடைபெறும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் கூட்டமாக அமையும்.
சுமார் ஐந்து லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இந்த தொடக்கம் எங்களின் வெற்றிக்கு அச்சாணியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. இந்தியா எதிர்காலத்தில் வல்லரசு நாடாக மாறுவதற்கான முயற்சிகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். அதிமுக – என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அப்போது தமிழகம் மிகப்பெரிய எழுச்சியை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
* என்டிஏ கூட்டணிக்கு எடப்பாடி தலைவர்: பியூஸ் கோயல்
விருந்துக்கு பின் பியூஷ்கோயல் நிருபர்களிடம் கூறுகையில், ‘என்னுடைய நீண்டகால நண்பரான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள்’ என்றார்.
* என்டிஏ கூட்டணியில் ஜி.கே.வாசன், ஜெகன்மூர்த்தி
ஜான் பாண்டியன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நடிகர் சரத்குமார், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், அவரது மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிர்சில்லா பாண்டியன், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, ஜனதா தளம் செக்யூலர் கட்சியின் தலைவர் காலப்பட்டி பொன்னுச்சாமி உள்ளிட்டோர் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசி என்டிஏ கூட்டணியை உறுதி செய்தனர். அப்போது, பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பியூஸ் கோயல் அழைப்பு விடுத்தார்.
* தனிச்சின்னம், 10 சீட் கேட்டு காமெடி
ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலுடனான சந்திப்புக்கு பின்னர் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில், ‘‘அதிமுக-பாஜ அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கூட்டணி. திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய மக்களுடைய நம்பிக்கையை பெற்றுள்ள பலமான கூட்டணியாக உருவாகி உள்ளது.
ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம். த.மா.கா. தனிச் சின்னத்தில் போட்டியிடும்’’ என்றார். ஜான் பாண்டியன் கூறும்போது, ‘‘நாங்கள் வெற்றிபெறும் 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்து உள்ளோம். பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு வரும் என்று நினைக்கிறோம். கூட்டணி ஆட்சி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்’’ என்றார்.
