சென்னை: 81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.9.45 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார். இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி இணைய வழியாக விருப்பப் பணியிட மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த பொது இடமாறுதல் கலந்தாய்வில் மொத்தம் 265 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் 218 தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதிவாய்ந்த 74 ஆசிரியர்களுக்கும் மற்றும் 55 ஆசிரியரல்லா தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கும் இடமாறுதலுக்கான ஆணைகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வழங்கினார்.
மேலும், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் என 81 கல்லூரிகளின் ஆய்வக வசதிகளை மேம்படுத்துவதற்காக 2025-26ம் ஆண்டுக்கு ரூ. 9.45 கோடி நிதி ஒப்பளிப்பு செய்ததற்கான ஆணைகளை கல்லூரி முதல்வர்களிடம் வழங்கினார்.
