- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- யூனியன்
- அமைச்சர்
- சென்னை
- மத்திய அமைச்சர்
- பியுஷ் கோயல்
- திமுக அரசு
சென்னை: தமிழ்நாட்டை மோதல் களமாக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் குடும்பம் தொடர்பாக விஷமத்தனமான அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
சமூகத்தின் ஆறில் ஒரு பங்கு மக்களை சமூக வட்டத்திற்கு வெளியே நிறுத்திய, சமூக புல்லுருவித்தன, புரோகிதக் கருத்துகளுக்கும், புராண புரட்டுகளுக்கும் எதிராக அறிவியல் கண்ணோட்டத்தையும், பகுத்தறிவு கருத்துகளையும் ஒரு நூறாண்டுகளாக பரப்புரை செய்து, தமிழ் சமூகத்தை பண்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கருத்துகளுக்கு கொள்கை வழி செயல்வடிவம் தருவதில் திமுக அரசு சிறப்புப் பெற்றுள்ளது. கலைஞர் குடும்பம் சாதி, மத அடையாளங்களை கடந்து பொதுவாழ்விற்கு பெருமை சேர்த்த சிறப்புக்குரியது. இதனையெல்லாம் மறைத்துவிட்டு, திமுக அரசையும், முதலமைச்சர் குடும்பத்தையும் இந்து விரோத அடையாளமாக்க முயற்சிக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். இதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
சமூக வாழ்வில் இயல்பான இறையிலாளர்களை, ஆன்மிக நம்பிக்கையாளர்களை இந்து மதவெறியர்களாக்கி, மதச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அணி திரட்டி, நல்லிணக்க சூழலும், சமூக அமைதியும் நீடித்து வரும் தமிழ்நாட்டை மோதல் களமாக்கி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
