×

எய்ம்ஸ் முடியாததால் மதுரைக்கு வர மோடிக்கு அச்சமா? மதுராந்தகத்துக்கு பிரசார கூட்டம் மாறியதன் பரபரப்பு பின்னணி

திருப்பரங்குன்றம்: எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தாமதத்தால், மதுரையில் நடக்கவிருந்த பிரதமர் மோடி கூட்டம் மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த 2019, ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பல்வேறு இழுத்தடிப்புக்கு பின், அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பின்னர், 2024 மே மாதம் கட்டுமான பணிகள் துவங்கின.

இந்தப் பணிகள் 2 கட்டங்களாக 33 மாதங்களில் நிறைவடையும் என கூறப்பட்டது. முதற்கட்டமாக கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்யாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய கட்டிடங்களுக்கான பணிகள் முதல் 18 மாதங்களுக்குள் (ஜனவரி 2026) முடிவடையும் என்றும், இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் பிப்ரவரி 2027க்குள் நிறைவடையும் என கூறப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹனுமந்தராவும், கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் முடியுமென உறுதி செய்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி, இந்த மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையாது எனவும், பணியாளர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்டவை இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளதாலும், திட்டமிட்டபடி முதல்கட்ட கட்டுமான பணிகள் முடிந்து பிப்ரவரி மாதத்தில் ராமநாதபுரத்தில் படிக்கும் மருத்துவ மாணவர்களை மதுரைக்கு மாற்றுவதிலும், வெளி நோயாளிகள் பிரிவு செயல்படுவதிலும் மேலும் தாமதம் ஏற்படும் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மருத்துவமனை திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வழக்கம்போல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. தோப்பூர் எய்ம்ஸ் பணிகளில் முதல்கட்ட கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி முடியவில்லை. தேர்தலுக்குள்ளாவது முடியுமா என்பதும் சந்ேதகம் தான்.

திட்டமிட்டபடி முதல்கட்ட கட்டுமானப் பணிகள் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் பிரதமர் மோடி பங்கேற்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை மதுரையில் நடத்த முடிவு செய்தனர். இந்த கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்து பாஜ மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பூமிபூஜையும் நடத்தினர்.

திடீரென மதுரையில் நடக்க வேண்டிய கூட்டம் ரத்து செய்யப்பட்டு, மதுராந்தகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. முதலில் இதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டோம். இப்போது தான், ஏன் மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டிய பிரசாரக் கூட்டத்தை நடத்த வில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.

எய்ம்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடியாததால், மதுரையில் எதை முன்வைத்து பேச முடியும்? எய்ம்ஸ் குறித்து பேசினால் அதுவே, நமக்கே பிரச்னையாக திரும்பி விடும். பாஜவிற்கு எதிர்மறையான விஷயங்களை தவிர்த்திடும் வகையில் தான் பிரதமரின் கூட்டத்தை மதுரையில் இருந்து மதுராந்தகத்திற்கு மாற்றியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது’’ என்றனர்.

Tags : Modi ,Madura ,AIIMS ,Maduranthakath ,Aims Hospital ,Maduranthaka ,AIIMS HOSPITAL ,TOPPUR NEAR MADURAI ,
× RELATED மந்தைவெளி பேருந்து முனையத்தில்...