×

சபரிமலை தங்கம் திருட்டு புகாரால் கேரள சட்டப்பேரவையில் அமளி: நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபை கூட்டம் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்கள் பேனர்களை ஏந்தியபடி சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.

இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் எழுந்து பேசும்போது, ‘சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் வாசவன் பதவி விலக வேண்டும். வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவை மிரட்டுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறினார். இதற்கிடையே ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சபையில் கூச்சல் குழப்பம் நிலவியதை தொடர்ந்து நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார்.

* சோனியா வீட்டில் சபரிமலை தங்கம்: அமைச்சர் பரபரப்பு புகார்
கேரள சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட போது கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியது: உண்ணிகிருஷ்ணன் போத்தி இரண்டு முறை டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் எதுவும் பேச மறுக்கின்றனர். உண்ணிகிருஷ்ணன் போத்தி எதற்காக சோனியா காந்தியை சந்திக்க சென்றார். அவரை அழைத்துச் சென்றது யார் என்பது குறித்து காங்கிரசார் பதில் கூறவேண்டும். சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கம் சோனியா காந்தியின் வீட்டில் தான் உள்ளது. எனவே அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இளைஞர் காங். போராட்டத்தில் போலீசார் மீது கல்வீச்சு
சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவி விலகக்கோரி நேற்று இளைஞர் காங்கிரசார் சட்டப்பேரவை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது திடீரென போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் ஏராளமான தொண்டர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Sabarimala ,Kerala Assembly ,Thiruvananthapuram ,House ,Kerala ,Assembly ,Governor… ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...