×

ம.பி.யில் சர்ச்சைக்குரிய வளாகத்தில் இந்து, முஸ்லீம் வழிபட அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மத்திய பிரதேசம், தார் மாவட்டத்தில் 11ம் நூற்றாண்டு மன்னர் போஜாவால் கட்டப்பட்ட போஜசாலை வளாகம் அமைந்துள்ளது. இந்து கட்டிட கலையுடன் கட்டப்பட்டுள்ள போஜ சாலையில் குவிமாடங்களும் உள்ளன. இது சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும் என இந்துக்கள் கூறுகின்றனர். அந்த இடத்தை கமல் மவுலா என்று கூறி இஸ்லாமியர்களும் வளாகத்துக்கு உரிமை கோருகின்றனர். இதனால் போஜசாலை வளாகம் நீண்ட காலமாக பிரச்னையாக இருந்து வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஏற்பாட்டின் கீழ் செவ்வாய்கிழமைகளில் இந்துக்கள் அந்த இடத்தில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமைகளில் தொழுகை செய்கிறார்கள்.

இந்தாண்டு இந்துக்களின் வசந்த பஞ்சமி பண்டிகை இன்று (23ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்களும் தொழுகை நடத்த அனுமதி கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்‌ஷி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு ,’வசந்தபஞ்சமி தினமான இன்று காலை சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பூஜைகள் நடத்தலாம். அதே நேரத்தில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. என்று தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அங்கு 8 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Bhoja Salai ,King Bhoja ,Dhar district ,Madhya Pradesh ,Hindus ,Goddess ,Saraswati.… ,
× RELATED பெரும்பாலான கட்சிகள் கூட்டணிக்கு...