புதுடெல்லி: நாடு முழுவதும் 2027ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதன் முதல்கட்டமாக நாடு முழுவதும் வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது. இதில் கேட்கப்படும் 33 கேள்விகள் குறித்து ஒன்றிய அரசின் அரசிதழ் நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘வீட்டின் தரை, சுவர், மேற்கூரை ஆகியவற்றின் கட்டுமான அடிப்படையில் அது எந்த வகையான வீடு, குடும்ப தலைவரின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டில் உட்கொள்ளப்படும் முக்கிய உணவு தானியம்? வீட்டில் குடிநீர், குளியலறை மற்றும் கழிவுநீர் வசதிகள் உள்ளனவா? குடிநீருக்கான ஆதாரம்? எந்த வகையான கழிப்பறை வசதி பயன்பாட்டில் உள்ளது? எந்த விதமான சமையல் எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது?, இணைய வசதி உள்ளதா? கணினி, மடிக்கணினி பயன்பாடு, செல்போன், வாகனம் உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
