முழங்கால் தசைகள், தசைநார்களில் ஏற்படும் வலி மாறுபாடு!

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்!

முழங்கால் மூட்டினைப் பற்றி ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்‌ அதாவது முழங்கால் வலி, மூட்டு வலி என்ற பொதுவான பிரச்னையாகதான் பார்த்துள்ளோம். ஆனால் முழங்காலில் தனிப்பட்ட பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி பார்த்தது இல்லை. அதாவது முழங்காலில் உள்ள தசைகள், தசை நார்களில் ஏற்படும் வலி மாறுபாடு இவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

ஒரு சிறிய கற்பனையாக உங்களுக்கு புரியும் வகையில் நாம் முழங்கால் மூட்டைப் பற்றி பகிர விரும்புகிறேன்..

உங்கள் காலை நிமிர்த்தி நிற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், முழங்கால் அங்கு ஒரு பெரிய கதவின் கீலைப் (hinge) போல இருக்கிறது. இந்தக் கதவைத் திறக்கவும் மூடவும் உதவும் மூன்று முக்கிய எலும்புகள் உள்ளன. மேலே இருந்து வருவது தொடை எலும்பு (Femur) – இது உடலின் மிக நீண்ட எலும்பு, வலிமையானது. கீழே இருந்து வருவது டிபியா எனும் எலும்பு (Tibia) – காலின் முன்புறத்தில் இருக்கும் பளுவான எலும்பு. முன்புறத்தில் ஒரு சிறிய தட்டு போல இருப்பது முழங்கால் தட்டு (Patella) – இது ஒரு கவசம் போல, முழங்காலைப் பாதுகாக்கிறது.இந்த எலும்புகள் சந்திக்கும் இடத்தில் உராய்வு ஏற்படாமல் இருக்க, ஒரு மென்மையான போர்வை போல குருத்தெலும்பு (Cartilage) போர்த்தியிருக்கிறது. இது எலும்புகளை ஒன்றை ஒன்று உராய்ந்து கொள்ளாமல் சுமுகமாக நழுவ வைக்கிறது.

அதோடு, இரண்டு சிறிய அரைவட்ட வடிவில் மெனிஸ்கஸ் என்ற குஷன்கள் உள்ளன – ஒன்று உட்புறத்தில் (மீடியல்), ஒன்று வெளிப்புறத்தில் (லேட்டரல்). இவை அதிர்ச்சியை உறிஞ்சுவது அ போல, நாம் ஓடும்போது அல்லது குதிக்கும்போது வரும் அழுத்தத்தைத் தாங்குகின்றன. இப்போது மிக முக்கியமான பகுதி – முழங்கால் தளராமல் நிற்க உதவும் தசைநார்கள் (Ligaments). இவை வலிமையான கயிறுகள் போல எலும்புகளை இணைக்கின்றன.

மையத்தில் இரண்டு குறுக்கு கயிறுகள்: முன்புற குறுக்கு தசைநார் (ACL) – முழங்கால் முன்னால் சறுக்காமல் தடுக்கும் காவலன்.

பின்புற குறுக்கு தசைநார் (PCL) – பின்னால் சறுக்கலைத் தடுப்பவை.

பக்கவாட்டில் உட்புற

தசைநார் (MCL) மற்றும் வெளிப்புற தசைநார் (LCL) – இவை முழங்கால் பக்கவாட்டில் ஆடாமல் உறுதியாக வைக்கின்றன. முழங்காலை நகர்த்தும் சக்தி தசைகளிடம் இருந்து வருகிறது. முன்புற தொடையில் குவாட்ரிசெப்ஸ் (Quadriceps) தசைகள் – இவை முழங்காலை நிமிர்த்த உதவும் வலிமை வாய்ந்தவை.

பின்புறத்தில் ஹாம்ஸ்ட்ரிங்ஸ்(Hamstrings)-

முழங்காலை வளைக்க உதவுபவை. இவை எல்லாம் ஒன்றாக இணைந்து நம்மை ஓட வைக்கின்றன. உள்ளே ஒரு சிறிய ஆலை போல சைனோவியல் திரவம் (Synovial fluid)- இது எண்ணெய் போல முழங்கால் மூட்டை ஈரமாக வைத்து உராய்வைத் தடுக்கிறது. சுற்றிலும் சிறிய தலையணைகள் போல பர்சேகள் (Bursae) உள்ளன, உராய்வு இல்லாமல் எல்லாம் சுமூகமாக நடக்க உதவுகின்றன.

முழங்கால் வலி: படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் வரும் வலியின் வித்தியாசம் மற்றும் காரணங்கள்

லிஃப்ட் வசதி இல்லாத மேல்தளத்தில் உள்ள ஒரு வலி நிவாரண சிகிச்சை மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்ட வயதான அம்மாவிற்கு சிகிச்சை முடிந்து வலி குறைந்து கீழே இறங்கி வரும் போது முட்டி இறுகி அவரால் நடக்க முடியாமல் போனதாகக் கூறி சிகிச்சைக்கு வந்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு பெரிய மாலிற்கு சென்ற போது அம்மா, மகள் என இரு வயதான தாய்மார்கள் தங்களுடைய பிள்ளை, பேரப்பிள்ளைகள் ஷாப்பிங் செய்து முடித்து விட்டு வரும் வரை ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.

அதில் ஒருவர் மிகவும் வயதானவர், அவரின் கொள்ளு பேரப்பிள்ளைகளுக்கோ பாட்டியை ஷாப்பிங் கூட்டிச் செல்ல ஆசை. ஆனால் பாட்டியால் வேகமாக நடக்க முடியவில்லை ஆதலால் ஓர் இடத்தில் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டார். நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தவரால் வீட்டிற்கு செல்லும் முன் திடீரென நகர முடியவில்லை, நகர்ந்து சென்ற பிறகு அவரால் திடீரென நிற்க முடியவில்லை மூட்டுகள் இறுக ஆரம்பித்தது சிறிது நடுக்கம் ஏற்பட்ட பிறகு நிதானித்து நடந்து சென்றார்.

அவரது தோற்றமும் வயதுமே கூறிவிட்டது அவருக்கு முட்டியில் என்ன பிரச்சினை உண்டென்பதை.இது போல முழங்கால் வலி பலருக்கு பொதுவான பிரச்சனை, குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது அல்லது இறங்கும்போது அதிகரிப்பது அடிக்கடி காணப்படுகிறது. இந்த வலி எப்போது அதிகமாக உணரப்படுகிறது என்பதை வைத்து, பிரச்னையின் காரணத்தை ஓரளவு அனுமானிக்கலாம். படிக்கட்டில் இறங்கும்போது வலி அதிகமாக இருத்தல்:

இறங்கும்போது முழங்கால் அதிக அளவில் வளையும் நிலையில் உடல் எடை முழுவதும் மூட்டின் மீது விழும். இதனால் உடல் எடையின் 3-7 மடங்கு அழுத்தம் முழங்கால் தட்டு (Patella) மற்றும் தொடை எலும்புக்கு இடையிலான பகுதியில் (Patellofemoral compartment) ஏற்படும். இதன் காரணமாக பெரும்பாலும் பேட்டெல்லோபீமோரல் பெயின் சிண்ட்ரோம் (Patellofemoral Pain Syndrome – PFPS) அல்லது முழங்கால் தட்டு சம்பந்தப்பட்ட தேய்மானம் ஏற்படுகிறது.

இது இளைஞர்களில், ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் அல்லது அதிக குதிக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவானது. குவாட்ரிசெப்ஸ் தசை பலவீனம் அல்லது முழங்கால் தட்டின் தவறான அமைப்பும் காரணமாகலாம்.எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல், தசையும் பலவீனமாக இருந்து திடீரென குதிக்கும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு பெட்டலா விலகல் (dislocation)கூட ஏற்படும் வாய்ப்புகள் உண்டு..

படிக்கட்டில் ஏறும்போது வலி அதிகமாக இருத்தல்: ஏறும்போது உடல் எடையை முழங்கால் தூக்க வேண்டியிருப்பதால், முழு மூட்டின் (Tibiofemoral compartment) மீது அழுத்தம் அதிகரிக்கும். இதனால் மெனிஸ்கஸ் கிழிவு (Meniscus Tear) அல்லது முழங்கால் ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் (Knee Osteoarthritis) போன்ற பிரச்சனைகள் வலியை ஏற்படுத்தும்.வயதானவர்களுக்கு ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் பொதுவானது, இதில் குருத்தெலும்பு தேய்ந்து எலும்புகள் ஒட்டும். மெனிஸ்கஸ் கிழிவு , திருகிய இயக்கம் (rotation )அல்லது வயது சம்பந்தப்பட்ட தேய்மானத்தால் வரலாம்.தசைநார் (Ligament) காயம் (எ.கா. ACL, MCL கிழிவு) இருந்தால் ஏறுதல் அல்லது இறங்குதலில் மட்டும் வலி வருவதை விட, முழங்கால் தளர்வது (Instability) அல்லது \”ஆடுவது\” போன்ற உணர்வு முக்கிய அறிகுறியாக இருக்கும். திடீர் திருப்பம் அல்லது பக்கவாட்டு அழுத்தத்தில் வலி அதிகரிக்கும்.

1. ACL கிழிவு (முன்புற குறுக்கு தசைநார் கிழிவு)

காரணம்: கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டில் திடீரென திரும்பும்போது அல்லது நிற்கும்போது.

அறிகுறிகள்: ‘பாப்’ என்ற சத்தம், உடனடி வீக்கம், முழங்கால் தளர்வது (ஆடுவது போல), நடக்க முடியாமை.

2. மெனிஸ்கஸ் கிழிவு (Meniscus Tear)

காரணம்: திருகிய இயக்கம் (rotation), படிக்கட்டில் இறங்கும்போது வலி, அல்லது வயது ஆக ஆக தேய்மானம்.

அறிகுறிகள்: வலி, வீக்கம், முழங்கால் ‘‘லாக்” ஆகுதல் (நிமிரவோ வளையவோ முடியாமை), சிறிய சத்தம் கேட்பது.

3. MCL கிழிவு (உட்புற தசைநார் கிழிவு)

காரணம்: பக்கவாட்டில் அடி விழுந்தால் (எ.கா. ரக்பி, கால்பந்து).

அறிகுறிகள்: உட்புற வலி, வீக்கம், முழங்கால் சற்று தளர்வது.

4. பெட்டெல்லார் டெண்டினைட்டிஸ் (Jumper’s Knee)

காரணம்: அதிகமாக குதித்தல் (கூடைப்பந்து, வாலிபால்).

அறிகுறிகள்: முழங்கால் தட்டுக்கு கீழே வலி, குதிக்கும்போது அதிகரிக்கும்.

5. முழங்கால் எலும்பு முறிவு

காரணம்: கடுமையான விபத்து அல்லது நேரடி அடி.

அறிகுறிகள்: தாங்க முடியாத வலி, வீக்கம், வடிவம் மாறுதல், நடக்கவே முடியாமை.

உடனடியாக செய்ய வேண்டியவை ;

(எல்லா காயங்களுக்கும் முதல் உதவி)

RICE முறை:

Rest – ஓய்வு எடுக்கவும், மற்றும் காயத்தின் மீது உடல் எடை அழுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Ice – 15-20 நிமிடம் ஐஸ்

Compression – இலகுவாக பேண்டேஜ் கட்டவும்

Elevation – முழங்காலை உயர்த்தி வைக்கவும்.

இந்த முதலுதவி செய்தும் வலி தாங்க முடியவில்லை அல்லது வலி தொடர்ந்து 2-3 நாட்களுக்கு மேல் இருந்தாலோ, வீக்கம் குறையவில்லை என்றாலோ, முழங்கால் தளர்வது அல்லது லாக் ஆகி நடக்கவே முடியவில்லை என்றாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

தொகுப்பு: இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

Related Stories: