சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கு கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை: கேரளா மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் கடந்த 1998ம் ஆண்டு தங்க தகடுகள் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணியை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் நிறுவனம் செய்தது. சன்னதி முழுவதும் 30 கிலோ தங்கம் மற்றும் 1800 கிலோ செம்பும் பயன்படுத்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு தங்கம் பதிக்கப்பட்ட சன்னதி முழுவதும் பழுதுபார்க்கும் பணியை உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் மேற்கொண்டபோது, ரகசியமாக தங்கம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் பழுதுபார்ப்பு பணிகள் நடந்த போது, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சன்னதி முழுவதும் பதிக்கப்பட்ட தங்க தகடுகள் எடை போடப்பட்டன. அப்போது 4 கிலோ வரை தங்கம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார், நிர்வாக அதிகாரிகள் முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் தந்திரி கண்டரரு ராஜீவரரு, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை நகை தயாரிப்பு நிறுவன சி.இ.ஓ பங்கஜ் பண்டாரி உள்ளிட்ட 11 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தங்கத் தகடு திருட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி முதற்கட்ட விசாரணையாக தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா என 21 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பங்கஜ் பண்டாரியின் நகை தயாரிப்பு நிறுவனம், வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள பங்கஜ் பண்டாரியின் வீட்டிலும் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். அதேபோல், சவுக்கார்ப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் கொண்டித்தோப்பை பகுதியை சேர்ந்த கல்பேஸ் என்பர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆவணகள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: