சென்னை : கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே ஆளுநர் மாளிகையை நடத்தினால் ராஜ்பவனின் 156 ஏக்கர் இடம் மிச்சமாகுமே? என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடத்தில் லோக் பவன் செய்திக்குறிப்பு வெளியிட்டது. ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களில் செய்திக்குறிப்பு என்றால் முந்தைய நாளே ஸ்கிரிப்ட் வந்துவிட்டதா?. தொழில்முனைவோர் வேறு மாநிலத்துக்குச் செல்லும் நிலை என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. தொழில் வாய்ப்புகளுக்காக வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு தொழிலாளர்கள் படையெடுப்பது ஏன்?. பிரதமர் பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை?.
ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் ரவி, பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் போட்டி போடுவதற்கு எதற்கு ஆளுநர் பதவி?. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய தகுதிகளைக் கொண்ட நபராகத் தன்னைக் கருதாமல் ஆர்.எஸ்.எஸ் பரப்புரை செய்வதை விரும்புகிறார் என்றால் கமலாலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொள்ளலாம்.
கமலாலயத்தின் ஒரு மூலையிலேயே ஆளுநர் மாளிகையை நடத்தினால் ராஜ்பவனின் 156 ஏக்கர் இடம் மிச்சமாகுமே?. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பு கடமைதான். அரசியலமைப்பு பற்றி எல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு தகுதி இல்லை. தேசிய கீதத்தை புறக்கணித்துவிட்டு சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளார்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
