புதுடெல்லி: மணல் குவாரி வழக்கை மாற்றக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 28 மணல் குவாரிகளில் விதிகளை மீறி 987 ஹெக்டேர் பரப்பில் மணல் அள்ளப்பட்டதில் அரசுக்கு ரூ.4,730 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, கடந்த 2024ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதில் அரசுக்கு ரூ.36.45 கோடி மட்டுமே வருவாய் கிடைத்ததாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட 15 நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.130 கோடியை முடக்கியதுடன், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. ஆனால் அமலாக்கத்துறையின் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்ற யூகத்தின் அடிப்படையில் உள்ளதாகவும், மணல் கொள்ளை வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகார வரம்பு இல்லை எனவும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்கனவே கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை மாற்றக் கோரியும், அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன்பு ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், ‘மணல் குவாரி விவகாரத்தில் மாநில அரசு பல்வேறு சட்ட விதிகளை வகுத்துள்ள நிலையில், இதில் தலையிட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை’ எனத் திட்டவட்டமாக வாதிட்டார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். இதே விவகாரத்தில் கேரளா அரசும் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
