“பிப்ரவரி 2, 3 தேதிகளில் மாமல்லபுரத்தில் சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு!!

சென்னை : “பிப்ரவரி 2, 3 தேதிகளில் மாமல்லபுரத்தில் சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது” என்று தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து துறைகளும் வளர்ச்சி கண்டு நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடலோர சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா துறைக்கு என கொள்கை, வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் வழங்கியுள்ளார். பிப்ரவரி 2, 3 தேதிகளில் மாமல்லபுரத்தில் சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பிப்.2ம் தேதி சுற்றுலா முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தனி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. சுற்றுலாத் துறையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, தேசிய, உலக சுற்றுலாத்தலமாக தமிழ்நாட்டை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை 2030ம் ஆண்டில் 12% அளவுக்கு வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் கண்டு அங்கு இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை நோக்கி வெளிநாட்டினர், இந்தியர்களை ஈர்க்கும் வகையில் சுற்றுலா மேம்படுத்தப்பட உள்ளது. சுற்றுலாத்துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில் மாணவர்கள் பங்கேற்க Tngts2026.com-ல் பதிவு செய்யலாம். கொடைக்கானலில் 100 ஏக்கர் பரப்பளவில் சுற்றுலா கிராமம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. India Global Education Summit உலக அளவில் மிகப் பெரிய கல்வி மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 28, 29 தேதிகளில் நடைபெற உள்ளது. 20 வெளிநாடுகளில் இருந்து உயர்தர கல்வியை வழங்கி கொண்டுள்ள பல்கலைக் கழகங்களில் இருந்து பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்,” இவ்வாறு கூறினார்.

Related Stories: